இந்து மகாசபாவினர் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
இந்து மகாசபாவினர் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
வடுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகளை தொடங்கக்கோரி மயிலாடுதுறையில் இந்து மகாசபாவினர் சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் எந்தவித திருப்பணி வேலைகளும் நடக்கவில்லை. கடந்த 9-ந்தேதி இரவு பெய்த கன மழையில் கஜசம்காரமூர்த்தி சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்தநிலையில் அகிலபாரத இந்து மகா சபாவினர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே பகுதியில் உள்ள வழிக்கரையார் என்கிற பாலசாஸ்தா கோவில் திருப்பணியையும் தொடங்கி 2 கோவில்களிலும் ஒரே நேரத்தில் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தி நேற்று மயிலாடுதுறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு இந்து மகாசபாவினர் சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
ஆர்ப்பாட்டத்திற்கு ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வேலன், மாவட்ட தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவரணி செயலாளர் மீனேஷ், சிவனடியார் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் ெலாளர் முத்துக்குமாரசுவாமி மற்றும் நிர்வாகிகள் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை அழைத்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வீரட்டேஸ்வரர் கோவில், பாலசாஸ்தா கோவில் விரைவில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.