பயிற்சி போலீசாரின் நிறைவு அணிவகுப்பு குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. பங்கேற்பு
பயிற்சி போலீசாரின் நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. பங்கேற்றார்.
பயிற்சி போலீசாரின் நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. பங்கேற்றார்.
திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு போலீசாருக்கான பயிற்சி முகாம் 7 மாதம் நடைபெற்றது. இதில் 95 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி கவாத் மைதானத்தில் போலீசாரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை ஐ.ஜி.ஜோஷி நிர்மல் குமார் கலந்துகொண்டு திறந்த வெளி வாகனத்தில் சென்று பயிற்சி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சி போலீசாரின் கவாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி போலீசார் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர். தொடர்ந்து துப்பறியும் மோப்ப நாய்களின் சாகசம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பயிற்சி போலீசாரின் கலை நிகழ்ச்சி, கமாண்டோ போலீஸ் சாகச நிகழ்ச்சி மற்றும் பிரமிடு நிகழ்ச்சி ஆகியவை காண்போரை மிகவும் கவர்ந்தது. முன்னதாக சட்டம் தொடர்பான தேர்வு கவாத்து பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுதலில் சிறந்து விளங்கிய பயிற்சி போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் ஒட்டுமொத்த சிறப்பைப் பெற்ற பயிற்சி போலீசார் ஒருவருக்கு கோப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து குற்றப் புலனாய்வு பிரிவு ஐ. ஜி. ஜோஷி நிர்மல் குமார் பயிற்சி போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கி பேசினார்.இதில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் கம்பன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டீபன், சவுந்தரராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பயிற்சி போலீசாரின் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.