கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்
கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்
தஞ்சாவூர்
பாபநாசம் தாலுகா திருமண்டங்குடி கிராமத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையினை வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாபநாசம் அருகே உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் வருகிற 21-ந்தேதி 12 மணி அளவில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. தலைமையில் இதுகுறித்து தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story