போலீஸ் தடியடிக்கு கண்டனம்: என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் தொடரும் -ராமதாஸ் அறிவிப்பு
என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் பா.ம.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை,
காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை ராட்சத எந்திரங்களை கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்.எல்.சி. நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்.எல்.சி. நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்துதான் பா.ம.க.வின் தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி நுழைவாயிலில் அறப்போர் நடத்தப்பட்டது.
பா.ம.க.வின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட போதிலும், போராட்டம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பேசி முடித்த பிறகு என்.எல்.சி.யை முற்றுகையிட டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் முயன்றபோது, அதை காவல்துறை அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி டாக்டர் அன்புமணி ராமதாசையும், அவருடன் சென்ற பா.ம.க.வினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கண்டனம்
அதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், பா.ம.க. தொண்டர்கள் மீது கண்மூடித் தனமாக தடியடி நடத்தியதுதான் நிலைமை மோசமடைய காரணம் ஆகும். பா.ம.க.வை சேர்ந்த ஒரு தொண்டரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அந்தக் காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்தே பா.ம.க.வின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராகவும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பா.ம.க. நடத்திய போராட்டத்தை கையாள்வதில் காவல்துறையினரின் அணுகுமுறையும், அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய சீண்டல்களின் மூலம் பா.ம.க. போராட்டத்தை அடக்கிவிட முடியாது.
மக்களின் உணர்வுகளை மீறி அவர்களின் மண்ணைப் பறிக்க முயன்றால் என்ன நடக்கும்? என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் சிங்கூர் அனுபவங்கள்தான் சான்று. அந்த அனுபவத்தில் இருந்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி. நிறுவனமும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், மண்ணின் மகத்துவம் குறித்தும், மக்களின் உணர்வுகள் குறித்தும் எதையும் அறியாத என்.எல்.சி.யும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் உணவு வழங்கும் பூமித்தாயை எந்திரங்களைக் கொண்டு பிளந்தெறிந்த காட்சியை சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய அத்துமீறல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.
போராட்டம் தொடரும்
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் என்.எல்.சி. நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மாறாக என்.எல்.சி.யின் அத்துமீறல்களுக்கு துணை போகக் கூடாது.
மீண்டும், மீண்டும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பா.ம.க. அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது. வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.