தகராறு செய்தவர்களை கண்டித்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல்


தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை தேரோட்டத்தில் தகராறு செய்தவர்களை கண்டித்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசமூர்த்தி தேரோட்டத்தில் தகராறு செய்தவர்களை கண்டித்த 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது ெசய்தனர்.

தேரோட்டத்தில் தகராறு

கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுத்து ெசன்றனர்.

கோவில்பட்டி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அரண்மனை வாசல் தெரு எட்டாம் பலிபீடம் அருகே தேர் சென்று கொண்டிருந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

அப்போது அந்த பகுதியில் கே. ஆலங்குளம் இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி மகன் சத்யராஜ் (வயது 35), அதே ஊரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் செல்வகணேஷ் (20), அவனிகோனந்தல் வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் முரளி பாண்டியன் (27) ஆகிய 3 பேரும் சாலையில் பக்தர்களை அவதூறாக பேசியவாறு ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் 2 பேர் தாக்கப்பட்டனர்

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கழுகுமலை சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை அவதூறாக பேசி தாக்கினர். இதை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், ஏட்டு சங்கரரெட்டி ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை அவர்களிடம் இருந்து மீட்க முயன்றனர். அப்போது, அந்த 3 பேரும் அங்கு கிடந்த கற்களை எடுத்து அவர்களையும் தாக்கியதுடன், 3 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

3 பேர் கைது

உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் சுற்றிவளைத்து அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ், செல்வகணேஷ், முரளிபாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story