இந்துக்கள் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதை கண்டித்து தூத்துக்குடியில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவோம்: சசிகலா புஷ்பா
இந்துக்கள் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதை கண்டித்து தூத்துக்குடியில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவோம் என்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையில் வெடிகுண்டு வீசி வருகின்றனர். அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. தி.மு.க.வின் அராஜகம் எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகியின் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். பா.ஜனதா கட்சியினர் பயப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படுகிறது.
ஆ.ராசா எம்.பி. இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து போலீசில் புகார் அளித்தால், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சாதி, மத மோதலை தூண்ட தி.மு.க. முயற்சிக்கிறது. நாங்கள் அனைத்து மதத்தையும் மதிக்கிறோம். தூத்துக்குடியில் ஆ.ராசாவை கண்டித்து பெண்கள் விரைவில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.