ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்துபா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஈரோடு மூலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மண்டல தலைவர் சி.காமராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் குணசேகரன், பாஸ்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பி.பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம், பொதுச்செயலாளர் எஸ்.எம்.செந்தில், முன்னாள் எம்.பி. சவுந்திரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஈரோடு மாநகராட்சி 56-வது வார்டுக்கு உள்பட்ட திருப்பதி கார்டன், பூங்கா நகர், ஆஞ்சநேயர்நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.