எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் முன்னாள் அமைச்சர் உள்பட 292 பேர் கைது


எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து  ஈரோடு மாவட்டத்தில்  அ.தி.மு.க.வினர் சாலை மறியல்  முன்னாள் அமைச்சர் உள்பட 292 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2022 1:00 AM IST (Updated: 20 Oct 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் உள்பட 292 பேர் கைது

ஈரோடு

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 292 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று தடையை மீறி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து தி.மு.க.வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

292 பேர் கைது

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பெரியார்நகர் மனோகரன், கோவிந்தராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, பகுதி அவைத்தலைவா் மீன்ராஜா என்கிற ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரகுமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், முன்னாள் கவுன்சிலர்கள் காவிரி செல்வம், கே.எஸ்.கோபால், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் துரைசக்திவேல், மாநகர பிரதிநிதி ஆஜம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கோஷமிட்டபடி ஈரோடு-சத்திரோட்டில் நின்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார். பின்னர் அவர்கள் ஈரோடு மல்லிகை அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை ஆகிய இடங்களிலும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாவட்டம் முழுவதும் 27 பெண்கள் உள்பட மொத்தம் 292 பேர் கைது செய்யப்பட்டார்கள்.


Related Tags :
Next Story