மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்தது.

மதுரை

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்தது.

முற்றுகை போராட்டம்

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் தமுக்கம் மைதானம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், வக்கீல் அணி மூத்த நிர்வாகி அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அதன்பின்னர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய தொகுதி செயலாளர் வக்கீல் ரவிக்குமார், இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளர் அரசமுத்து பாண்டியன், தொண்டரணி பரமசிவம் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி

எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிலால் தீன், துணை தலைவர் ஜாபர் சுல்தான், அமைப்பு பொதுசெயலாளர் பகுர்தீன், 28-வது வார்டு நிர்வாகிகள் செயல்வீரர்கள், இஸ்லாமியர்கள், ஜமாஅத்தார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று அன்னை சத்யா நகர், புதூர் சங்கர் நகர், தாசில்தார் நகர், செல்லூர் புதுபள்ளிவாசல், மேலூர் பெரிய பள்ளிவாசல், கரிசல்பட்டி, அலங்காநல்லூர் உத்தங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


Next Story