குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாததை கண்டித்து அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்; சென்னிமலை அருகே பரபரப்பு
சென்னிமலை அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததை கண்டித்து அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததை கண்டித்து அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் குழாயில் உடைப்பு
சென்னிமலை அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் திப்பம்பாளையம். இங்கு மின் மோட்டார் வசதியுடன் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து திப்பம்பாளையம் பகுதிக்கும், பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட திப்பம்பாளையம் கிராமத்தையொட்டி உள்ள மற்றொரு பகுதிக்கு பல ஆண்டுகளாக குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திப்பம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றது. இதில் பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
பஸ்கள் சிறைபிடிப்பு
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 8 மணி அளவில் காலிக்குடங்களுடன் திப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தனர்.
அப்போது அந்த வழியாக ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சையும், ஊத்துக்குளி நோக்கி சென்ற மற்றொரு அரசு டவுன் பஸ்சையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஜவகர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் ராசு என்கிற தங்கவேல், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் சென்னிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'பாலதொழுவு ஊராட்சி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயை யாரோ சிலர் வேண்டுமென்றே உடைத்து விட்டனர். எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்,' என்றனர்.
அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை விரைவில் சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து பஸ்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.