விலைவாசி உயர்வை கண்டித்துஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
விலைவாசி உயர்வை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
விலைவாசி உயர்வை கண்டித்து, ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
விலைவாசி உயர்வு
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
1 கோடி பெண்கள்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
காவிரி நதி நீர் பிரச்சினை வந்தபோது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 75 மணி நேர உண்ணாவிரதம் இருந்து, பல வகையில் போராடி, காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தார். ஆனால் தமிழக மக்களின் நலனுக்காக தி.மு.க. அரசு செயல்படாததால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.
அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை மாதம் ரூ.1,000 தருவோம் என வாக்குறுதி வழங்கிய தி.மு.க. தற்போது 1 கோடி பெண்களுக்கு மட்டும் வழங்குவதாக கூறி உள்ளனர். 2 கோடியே 27 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் மீதமுள்ள பெண்களையும், குடும்பதாரர்களையும் அரசு ஏமாற்ற பார்க்கிறது. இந்த அரசின் மோசமான செயல்பாடு, முறைகேடுகளை மத்திய அரசு பார்த்து கொள்ளும். இவர்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் கண்காணித்து வருகிறது. விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அ.தி.மு.க.வை பெருவாரியாக ஆதரித்து புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பாக வழங்குவார்கள். அதன்பின்னர் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி நிற்கும் அளவுக்கு அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மக்களிடம் வாக்கைப்பெற, 520 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி, 5 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசை மக்கள் வெறுத்து வருகின்றனர்.
மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் தி.மு.க. அரசு வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி உள்ளனர். தற்போது அனைத்து காய்கறியும் விலை உயர்ந்துள்ளது. ஒரு அரசு நினைத்தால் 15 முதல் 20 மணி நேரத்தில் தக்காளி அதிகம் விளையும் பகுதியில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து இறக்கி இருக்கலாம். அதில் ஏதாவது கமிஷன் கிடைக்காதா? என பார்ப்பதால், இன்று வரை விலை குறையவில்லை. இதனால் வெறுப்படைந்துள்ள மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு கருப்பணன் எம்.எல்.ஏ. கூறினார்.
அதிக ஆர்வம்
முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை கிடையாது. அவர்களின் குடும்பத்தின் மீது மட்டும்தான் அக்கறை. அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு செல்ல இருக்கிறார்கள். அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதுதான் நடவடிக்கை பாயும். பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தருவதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்று அறிவித்து இருக்கிறார்கள். இதில் இருந்தே மக்களைப்பற்றி தி.மு.க.வுக்கு கவலை இல்லை, ஊழல் செய்வதில்தான் தி.மு.க.வினர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் நடக்கும். இந்த தேர்தலில் அதிகப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, பழனிச்சாமி, கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் தங்கமுத்து, பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா, வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரைசக்திவேல், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜீவா ராமசாமி, முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால். ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் கே.சி.பொன்னுதுரை, கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.