புதுக்கோட்டைசம்பவத்தைகண்டித்து வருகிற 11-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டைசம்பவத்தைகண்டித்து வருகிற 11-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டைசம்பவத்தைகண்டித்து வருகிற 11-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல்.திருமாளவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் மனித கழிவுகளை கலந்தவர்களை கண்டித்து வருகிற 11-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று திருமாவளவன் எம்.பி. கூறி உள்ளார்.

பேட்டி

பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் குதர்க்கமான வார்த்தைகளை பேசி வருகிறார். பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும், அதற்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்க வேண்டும் என்று கவர்னர் விரும்புகிறார். அவர் அரசமைப்பு சட்டத்தின் பிரதிநிதி. அதனை மறந்து விட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டரை போல செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற்கொள்ளலாம்.

நீடிக்க தகுதியில்லை

அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார். தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒரே பொருளை குறிக்கும் என்பதை அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் மறைத்து இருக்கலாம். சட்டப்பூர்வமாக காமராஜர் காலத்திலும், அண்ணா காலத்திலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுடன் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதனை அவர் விவாதத்துக்கு உட்படுத்தியது தேவையற்ற ஒன்று. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அப்படிப்பட்டவர் தி.மு.க.வின் கொள்கை, திராவிட அரசியலின் கருத்துக்கு, கோட்பாடுகளுக்கு எதிரானவர். அப்படிப்பட்டவர் தமிழகத்தில் கவர்னராக நீடிக்க தகுதியில்லை.

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் மனித கழிவுகளை கலந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து வருகிற 11-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

ஈஷா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணின் இறப்பு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

பாராட்டக்கூடிய ஆட்சி

நல்லிணக்கமான கூட்டணியை முதல்-அமைச்சர் வழிநடத்தி செல்கிறார். பொதுமக்கள், அனைத்து தரப்பினராலும் பாராட்டக்கூடிய வகையில் ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறார்.

தலித்துக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபகாலமாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து வன்கொடுமையை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை தருகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக அரசு முன்னெடுக்கக்கூடிய சமூகநீதி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story