பணியாளர் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்


பணியாளர் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
x

பணியாளர் தேர்வாணையத்தில் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி வழங்கி 10 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி நிறைவு செய்ய இருக்கிறார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்துக் கொண்டு மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்துக்கட்டியுள்ளது. இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் தலைநகர் டெல்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது. தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ஏற்பதன் மூலம், மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களே பணியில் நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் நிர்வாகமும் சிறப்பாக நடைபெறும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story