பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டர் மீது தாக்குதல்


பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டர் மீது தாக்குதல்
x

திட்டக்குடி அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டரை பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர்.

கடலூர்

ராமநத்தம்,

சிறுபாக்கம் அருகே பனையாந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திட்டக்குடி நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை கரூர் மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வை.புதூரை சேர்ந்த ராஜலிங்கம் (வயது 37) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக வேப்பூர் அருகே பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி (38) என்பவர் பணியில் இருந்தார்.

வைத்தியநாதபுரத்திற்கும், தொழுதூருக்கும் இடையே சென்றபோது, பள்ளி மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதைபார்த்த கண்டக்டர் ராமசாமி, மாணவர்களை கண்டித்து பஸ்சுக்குள் வருமாறு கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் ராமசாமியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதை கவனித்த டிரைவர் பஸ்சை ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார்.

எச்சரிக்கை

அதனை தொடர்ந்து மாணவர்கள் தன்னை தாக்கியது குறித்து ராமசாமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, மாணவர்கள் செய்த தவறு குறித்து விளக்கி கூறி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்களிடம், இனி இதுபோன்று நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story