மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மகள் கண்முன்னே அரசு பஸ் கண்டக்டர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மகள் கண்முன்னே அரசு பஸ் கண்டக்டர் பலி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண்முன்னே அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

அரசு பஸ் கண்டக்டர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு காஞ்சனா (40) என்ற மனைவியும், சிவரஞ்சினி (13) என்ற மகள் உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் தனது மகள் சிவரஞ்சினியுடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆதனூர் அருகே சென்றபோது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மகள் கண்முன்னே பலி

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மகள் சிவரஞ்சினி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தலையில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், சிவரஞ்சினி கண்முன்னே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சிவரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் மகள் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.


Next Story