பட்டதாரி பெண்ணை கரம் பிடித்த கண்டக்டர்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜ ஐஸ்வர்யா (வயது 22). பட்டதாரி. வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டையை சேர்ந்தவர் மோதிஸ்வரன் (24). இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த பஸ்சில் அடிக்கடி பயணம் செய்தபோது ராஜ ஐஸ்வர்யாவுக்கும், மோதிஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பாதுகாப்பு கேட்டு, வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மோதிஸ்வரனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.