ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும், கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை அவசர ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
போட்டி உறுதி
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பெங்களூரு புகழேந்தி, வக்கீல் ராஜலட்சுமி, மற்றும் மாவட்ட செயலாளர்கள் எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி, சிவா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 9.50 மணிக்கு முடிவடைந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. கூடிய விரைவில் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது.
இரட்டை இலை கிடைக்கும்
தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் இருக்கிறது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால், ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கிறது. எனவே எங்களுக்கு தான் உறுதியாக இரட்டை இலை கிடைக்கும். எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்.
தேசிய கட்சி என்பதால் பா.ஜ.க. இடைத்தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.