கிருஷ்ணகிரியில் வீடு, குடோனில் பதுக்கிய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வீடு, குடோனில் பதுக்கிய 2½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி
கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் சாலை சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தனியார் குடோனில் சோதனை செய்தபோது 42 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
பறிமுதல்
இதேபோல் திருவண்ணாமலை சாலை, அரசு நகர்ப்புற சுகாதார நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் 10 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.