ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கிய4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பரமத்திவேலூர்
பரமத்தி வேலூரில் உள்ள முக்கிய சாலைகளான பள்ளி சாலை, கல்லூரி சாலை, பஸ் நிலையம், பழைய பைபாஸ் சாலை மற்றும் திருவள்ளுவர் சாலை, பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் வேளைகளில் சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அதிக வேகமாக சென்று வருகின்றனர். இதனால் சாலையில் நடந்தும், சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிக வேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்களை பிடித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அவர்கள் ஓட்டிய 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.