உத்தனப்பள்ளி வழியாக கர்நாடகாவிற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி வழியாக கர்நாடகாவிற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அரிசி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நேற்று காலை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் உத்தனப்பள்ளி அருகே சினிகிரிபள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவு கொண்ட மொத்தம் 51 மூட்டைகளில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது- பறிமுதல்
அவர் சூளகிரி தாலுகா மேலுமலை அருகே உள்ள செக்காலப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (வயது 33) என தெரிய வந்தது. மேலும் மாதேப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.