மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 3 பேர் கைது
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களமேடு:
மாட்டு வண்டிகள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒகளூர் கிராமத்தில் மணல் திருடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் ஒகளூர் கிராமத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது ஒகளூர் பஸ் நிலையம் அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஒகளூர் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார்(வயது 35), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (49), வடக்கு தெருவை சேர்ந்த ரவி (53) ஆகிய 3 பேரை பிடித்து, கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தம்பதி உள்பட 3 பேர் கைது
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, அத்தியூர் ஏரிக்கரை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற அத்தியூர் கிழக்கு தெருவை சேர்ந்த இளையபெருமாள் (வயது 62), அவரது மனைவி காந்தா (58) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 44 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் (60) என்பவர், சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பழனிவேலை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.