துபாயில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்தரூ.15 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த ரூ.15 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் இருந்து துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் தனித்தனியாக பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்திறங்கிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சுக்குர் (வயது 21) என்பவரிடமிருந்து களிமண் போன்ற பொருளில் மறைத்து வைக்கப்பட்ட 278 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 166 ஆகும். இதுகுறித்து, அப்துல் சுக்குரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.