ரெயிலில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. ரெயிலில் முன்பகுதியில் உள்ள பொது பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரேஷன் அரிசி 10 மூட்டைகளில் தலா 20 கிலோ வீதம் 200 கிலோ ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையெடுத்து கடத்த முயன்றவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த இந்திரா (வயது 45) மற்றும் செல்வி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.