மான் கறி பறிமுதல்; வாலிபர் கைது
மான் கறியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் சிலர் விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன் உத்தரவின் பேரில் வனவர் இளவரசன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்லுபத்தி பீட் பகுதியில் மான் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 28) உள்பட 2 பேர் சேர்ந்து புள்ளிமானை வேட்டையாடியதும், பின்னர் மாரிமுத்து வீட்டில் வைத்து மானை சமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 2 கிேலா மான்கறிகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட விளக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த மாரிமுத்துவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.