தீபாவளி வாழ்த்தால் உடைந்த மண்டை... ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்த நபர்..!


x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சுயேட்சை கவுன்சிலரின் கணவர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ௧௫-வது வார்டு பெண் கவுன்சிலர் சினேகா. இவரின் கணவர் ஹரிஹரனுக்கும், திமுக செயலாளர் நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயனுக்கும் தேர்தல் சமயத்தில் இருந்தே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தீபாவளி முன்னிட்டு ஹரிஹரன் நேற்று இரவு நண்பர்களுடன் துணிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயனின் நண்பரும் திமுக பிரதிநிதியுமான சுரேஷ் என்பவர் ஹரிஹரனுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் வாழ்த்து கூற தேவையில்லை என ஹரிஹரன் கூறியதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறவே கார்த்திகேயன் வீட்டு முன்பு ஹரிஹரன் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினருக்கும் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் பார்க்க வந்த ரமேஷுக்கும் ஹரிஹரனுக்கும் இடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெவ்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலைமறியல்கள் கைவிடப்பட்டன. சுயேட்சை கவுன்சிலரின் கணவர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story