செஞ்சியில் கோவில் பிரச்சினையில் இருபிரிவினரிடையே மோதல் உருவாகும் சூழல் பதற்றம்-போலீஸ் குவிப்பு
செஞ்சியில் கோவில் பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
செஞ்சி,
செஞ்சியில் கோவில் பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
செஞ்சியில் கோவில் பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோவில் மேற்கூரை
செஞ்சியை அடுத்த மேல்அத்திப்பாக்கத்தில் மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில் அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணர் கோவில் முன்பு தகரத்தால் மேற்கூரை போடுவதற்கு அந்த கோவிலை வழிபடும் ஒரு சமுகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு மாரியம்மன் கோவிலை சேர்ந்த ஒரு சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில், அங்கு மேற்கூரை அமைத்தால் தங்களது கோவிலில் பொங்கல் வைத்துவழிபாடு செய்யும் போதும், கோவிலை சுற்றி வருவதற்கும் போதிய இடம் வசதி இல்லாமல் போய்விடும் எனவே கிருஷ்ணர் கோவில் முன்பு மேற்கூரை அமைக்க கூடாது என்று தெரிவித்து வருகின்றனர்.
மோதல் உருவாகும் சூழல்
இந்த பிரச்சினை கடந்த 6 மாதங்களாக நீடித்துவரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணர் கோவில்தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மேற்கூரை அமைக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில், நேற்று கிருஷ்ணர் கோவில் முன்பு தகரத்தால் கூரை அமைக்க அவர்கள் முற்பட்டனர். இதற்கு மாரியம்மன் கோவிலை வழிபடுபவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர்.
இதனால், இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செஞ்சி பிரியதர்ஷினி, விழுப்புரம் பார்த்திபன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர்.
கோவில் முன்பு தர்ணா
தொடர்ந்து, இருபிரிவினரிடையே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மாரியம்மன் கோவிலை வழிபட்டு வருபவர்கள் தரப்பில் பெண்கள் மட்டும் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பெண் போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களிடம், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உரிய அனுமதியின் பெயரில் தான் தற்போது இங்கு அவர்கள் மேற்கூரை அமைத்து வருகிறார்கள், எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் அவர்கள் கிருஷ்ணர் கோவில் முன்பு மேற்கூரையை அமைத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
தொடர்ந்து அங்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.