இருதரப்பினரிடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு
உடையார்பாளையம் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே காரைக்காட்டான்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 55), விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில், காயம் அடைந்த வீரப்பன், பொன்னுசாமி ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் மோதலில் ஈடுபட்ட வீரப்பன், பரிதி இளம்வழுதி (24), ஜெயசூர்யா (20), பானுமதி (50), பொன்னுசாமி, சத்யா (39), யசோதை (60), முத்துக்கருப்பன் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.