ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மோதல் முற்றியது: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது.
ஒற்றை தலைமை விவகாரம்
இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மன வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே நேற்று ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிரந்தர பொதுச்செயலாளர்
எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து 19 மாவட்ட செயலாளர்கள், 90-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை வைத்து நீக்கினார்கள். 1972-ம் ஆண்டு தொண்டர்களுக்கான இயக்கமாகதான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார். லட்சோப லட்சம் தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட முறையில் மாவட்ட செயலாளர்களோ, எம்.எல்.ஏ.க்களோ ஒன்று கூடி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவோ, நீக்கவோ முடியாது. பொதுச்செயலாளர் பதவி தேர்தல் முறையில்தான் உருவாக்கப்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது.
பொதுக்குழுவில் தீர்மானங்கள் மூலம் திருத்தங்கள், மாற்றங்கள் கொண்டு வர முடியும். பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மூலம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை மட்டும் எந்த சூழலிலும், எப்போதும் மாற்றக்கூடாது என்று அ.தி.மு.க. சட்டத்திட்ட விதியில் உள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதா 30 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் முறையில் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் நானும், எடப்பாடி பழனிசாமியும் இணையும்போது, 'பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து தரவேண்டும். அவருக்கு பிறகு யாரும் இருக்கக்கூடாது. நிரந்தர பொதுச்செயலாளர் என்று வாய்நிறைய அழைத்த அந்த பதவியை யாருக்கும் தரக்கூடாது', என்று சிந்தித்ததின் அடிப்படையில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.
என்னால் அரசு காப்பாற்றப்பட்டது
நான் அப்போது துணை முதல்-அமைச்சர் பதவி கேட்கவில்லை. ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்-அமைச்சராக நான் அடையாளம் காட்டப்பட்டேன். கட்சி சோதனைகளை சந்திக்காமல் இருப்பதற்காகவும், என்னை வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாலும் அந்த பதவியைஏற்றுக்கொண்டேன்.
கட்சியின் இணைப்பு அவசியம் தேவை என்பது ஏன் உருவானது என்றால், டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, தி.மு.க.வினரும், நாங்களும் ஆதரித்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அந்த சூழலில், ஆட்சி பறிபோக கூடாது என்ற நல்லெண்ணத்தில் டி.டி.வி.தினகரன் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தோம். அதனால் அரசு காப்பாற்றப்பட்டது.
இரட்டை தலைமை என்பது முதலில் பதவிகளில் மட்டும்தான் என்றார்கள். சரி ஒப்புக்கொண்டேன். 2 நாட்கள் கழித்து கட்சி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளில் இருவருமே கையெழுத்து போட வேண்டும் என்றார்கள். கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று தொண்டர்கள் அனைவருமே விரும்பினார்கள். எனவே காலத்தின் கட்டாயம் கருதியும், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அதை ஏற்றுக்கொண்டேன். இந்த 6 ஆண்டு காலம் இருவருமே இணைந்து பணியாற்றினோம். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், நான் துணை முதல்-அமைச்சராகவும் பணியாற்றினேன்.
மோடி கேட்டுக் கொண்டதால்
அரசியலமைப்பு சட்டப்படி, துணை முதல்-அமைச்சர் பதவிக்கு என எந்தவித பிரத்யேக அதிகாரமும் கிடையாது. நான் பதவி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில், பிரதமர் நரேந்திரமோடி என்னை அழைத்து கேட்டுக்கொண்டதால் துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு... இந்த ஒற்றை தலைமை விவகாரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. இது கனவா, நனவா? என்பது தெரியவில்லை.
என்னிடம் கலந்து பேசவில்லை
பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடமில்லை என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் அதை விளக்குவதற்காகதான் அன்று அ.தி.மு.க. கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் வரவேற்புரை கே.பி.முனுசாமி ஆற்றினார்.
எடப்பாடி பழனிசாமியும், நானும் விளக்கி பேசினோம். கூட்டம் நன்றியுரையோடு முடிகின்ற நேரத்தில் சிலர் கருத்து சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆரம்பித்தார்.
இந்த நிகழ்ச்சி நிரல் குறித்து ஒருங்கிணைப்பாளராக என்னிடம் கலந்து பேசவில்லை. தலைமை கழக நிர்வாகிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களிடமும் கலந்து பேசவில்லை.
டி.ஜெயக்குமாரால் பூதாகரமானது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஒரு அறையில் கலந்து பேச வேண்டிய நிகழ்வு இது. இதை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியிருந்தாலும், வெளியில் யாரிடமும் பேட்டியாக சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியில் போய் சொன்னதால், இந்த விஷயம் மிகப்பெரிய பூதாகரமாக செய்தி வெளியில் சென்று கொண்டிருக்கிறது.
நன்றாக 6 ஆண்டு காலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஒற்றை தலைமை என்ற ஒரு கருத்தை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இது தேவைதானா? என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான் இன்று பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும் தங்களுடைய பல்வேறு நிலைகளை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதனால் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
மிகப்பெரிய துரோகம்
கேள்வி:- இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
பதில்:- இப்போது இரட்டை தலைமை நன்றாக போய் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஒற்றை தலைமையாக பொதுசெயலாளர் பதவியில் இருந்தார். அந்த பதவி அவருக்கு மட்டும் உரித்தானது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் இந்த பொதுச்செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கொடுத்த மிகுந்த மதிப்பு, மரியாதை காலாவதியாகிய சூழல் உருவாகும். இது அவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகத்தான் நான் நினைக்கிறேன்.
கேள்வி:- நீங்களும், எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் பேசுவீர்களா?
பதில்:- பேசலாம். எங்களுக்குள் 'ஈகோ' எதுவும் கிடையாது. எத்தனையோ பிரச்சினைக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். நான் கருத்து சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க. எந்த நிலையிலும் பிளவுபட்டு விடக் கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு.
கேள்வி:- அ.தி.மு.க.வில் யார் ஒற்றை தலைமை பிரச்சினையை கிளப்புகிறார்கள்?
பதில்:- யாரையும் குறிப்பிட்டு அவர்களை நோக வைக்க விரும்பவில்லை.
பிரச்சினைக்கு காரணம்
கேள்வி:- ஒற்றை தலைமை தேவையில்லை என எடப்பாடி பழனிசாமி இதுவரை சொல்லவில்லை. அவருடன் நீங்கள் நேரடியாக பேச எது தடுக்கிறது?
பதில்:- எதுவும் என்னை தடுக்கவில்லை. நான் தயாராகவே இருக்கிறேன். இந்த பிரச்சினை யாரால், எப்படி வந்தது? என்பதை நாங்கள் இருவரும் அமர்ந்து பேசி, சம்பந்தப்பட்டவரை கண்டிக்க வேண்டும். எதுவும் வெளியில் பேசக்கூடாது என்று முடிவு எடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வெளியே வந்து யார் பேட்டி கொடுக்க சொன்னது? (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்). அதுதான் இன்றைய பிரச்சினைக்கே காரணம்.
எந்த பொறுப்பையும் கேட்டதில்லை
கேள்வி:- அப்படி கட்சி விதிமுறைக்கு மீறி பேட்டி கொடுத்தவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை?
பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்
கேள்வி:- எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் நீங்கள், ஒற்றை தலைமையையும் விட்டுக்கொடுப்பீர்களா?
பதில்:- எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு மூலக்காரணமே தொண்டர்கள் தான். தொண்டர்கள் மனம் சஞ்சலப்படக்கூடாது. கட்சி எந்த நிலையிலும் சிறு பின்னடைவை, சறுக்கலை பிளவை ஏற்படுத்த பன்னீர்செல்வம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அத்தனை நிலைகளிலும் அனைத்தையும் விட்டுக்கொடுத்து சென்று இருக்கிறேன். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவது இல்லை.
கேள்வி:- ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும், கட்சியில் நீங்களும் என ஒப்புக்கொண்ட போது என்ன பொறுப்பை நீங்கள் கேட்டீர்கள்?
பதில்:- கட்சியில் ஒரு பொறுப்பில் இருந்து செயல்பட்டு கொள்கிறேன் என்று தான் சொன்னேன். எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. உச்சபட்ச அதிகாரத்தில் பன்னீர்செல்வம் இருக்க வேண்டும் என்று நான் எந்த காலத்திலும் கேட்கவில்லை.
தற்காலிக ஏற்பாடு
கேள்வி:- நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று சொல்லும் நீங்கள், சசிகலாவை எப்படி பொதுச்செயலாளர் ஆக்கினீர்கள்?
பதில்:- பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால், தற்காலிக ஏற்பாடாக கட்சியை வழிநடத்தவும், முறைப்படி தேர்தல் நடத்தி தொண்டர்களால் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கும் வரையிலும், கட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது.
கேள்வி:- ஒற்றை தலைமை வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்:- அதை அவர்தான் சொல்ல வேண்டும்.
வலுவான அ.தி.மு.க. தேவை
கேள்வி:- ஒரு வலுவான அ.தி.மு.க. தேவை என்று சொல்கிறீர்கள். அதில் சசிகலா, டி.டி.வி.தினகரனையும் உள்ளடக்கிய அ.தி.மு.க.வாக இருக்குமா?
பதில்:- நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சசிகலா, டி.டி.வி.தினகரனை பொறுத்தவரையில், தலைமைக்கழக நிர்வாகிகள்தான் முடிவு எடுப்பார்கள். அந்த நிலையில்தான் இன்றும் இருக்கிறேன். ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி என்னிடம் இருந்தாலும், கழகத்தின் முடிவை தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து பேசிதான் முடிவு எடுப்பார்கள். அதைத்தான் நானும், எடப்பாடி பழனிசாமியும் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.
மிகப்பெரிய வருத்தம்
கேள்வி:- அ.தி.மு.க.வில் உங்களுக்கு எதிராக குழு செயல்படுகிறதா?
பதில்:- எனக்கு எதிராக அ.தி.மு.க.வில் இதுவரையில் எந்த குழுவும் செயல்பட்டது இல்லை.
கேள்வி:- ஒற்றை தலைமை விவகாரத்தில் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்கிறதா?
பதில்:- மிகப்பெரிய வருத்தம். ஏனென்றால் சொன்னால் தொண்டர்களை எந்த நேரத்திலும் மனம் சஞ்சலப்பட விடக் கூடாது. துயரப்படுத்த கூடாது என்ற மனநிலை எனக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் நாமே உள்வாங்கி கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். நல்லபடியாக தொண்டர்கள் மனநிறைவோடு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பணியாற்றிய நிர்வாகிகளை கொண்டு 14 பேர் அடங்கிய உயர்மட்ட குழு கலந்து பேசி முடிவெடுக்கட்டும். அதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.
பிரதமரை சந்திக்க முடிவா?
கேள்வி:- ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நீங்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- இது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை. இதை நாங்கள்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி:- ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகி கொள்ளுங்கள் என்று உங்களை யாராவது கட்டாயப்படுத்த முடியுமா?
பதில்:- என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தொண்டர்கள் மனநிலையை நான் ஏற்றுக் கொள்வேன்.
கேள்வி:- 23-ந்தேதிக்குள் சுமூகமான முடிவு எட்டப்படுமா?
பதில்:- சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
பேட்டியின்போது அவரது ஆதரவாளர்கள் ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், தர்மர் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.