தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?


தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?
x

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க, 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

நோக்கம்

பொருட்களின் தரத்தை தேசிய அளவில் நிர்ணயம் செய்து தரச்சான்றிதழ் வழங்குவதுடன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, சர்வதேச அளவில் இந்திய பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளித்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவைதான் அதன் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பல்வேறு உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு எல்லாம் தரநிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் தங்கத்திற்கு மட்டும் தரநிர்ணயம் செய்ய போதுமான வழிமுறைகள் செய்யப்படாமல் இருந்து வந்தது.

சேதார இழப்பு

தங்கத்தைப் பொறுத்த அளவில் 24 கேரட் சுத்தத் தங்கத்தை நேரடியாக அணிகலன்களாக செய்ய முடியாது. அதனுடன் செம்பு மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலந்து 22 கேரட் அளவிற்கு தங்கத்தை மாற்றம் செய்த பிறகே அதனை வளைத்து நெளித்து மக்கள் விரும்பும் வகையிலான அணிகலன்களை செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கும் மக்களிடம் செய்கூலி, சேதாரம் என கூடுதலான பணத்தை பெற்ற போதிலும், விற்பனை செய்யும் வியாபாரிக்கு வியாபாரி தங்கத்தின் தரம் வேறுபட்டே காணப்பட்டு வந்தது.

உதாரணமாக ஒரு வியாபாரியிடம் வாங்கிய தங்க நகையை கொஞ்சநாள் கழித்து விற்பனை செய்கிறோம். அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்குகிறோம். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நாம் கொடுத்த நகையில் அதிகளவில் சேதாரத்தை கழித்து தங்கத்தின் மதிப்பை குறைத்துக் கூறி கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்ட பின்னரே புதிய தங்க நகைகளைத் தருகிறார்கள்.

ஹால்மார்க் முத்திரை

இதுபோன்ற பிரச்சினைகளை களைய இந்திய தரநிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2000 ஆண்டு முதல் 'பி.ஐ.எஸ். ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யும் முறை அமுலுக்கு வந்தது. இதனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ஆபரணங்களை இந்திய தரநிர்ணய மையங்களில் காண்பித்து அவற்றின் தரத்தை சோதனை செய்து, ஹால்மார்க் முத்திரையை பெற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இத்தகைய ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மக்கள் மறுவிற்பனை செய்து புதிய வடிவத்தில் நகைகளை பெறும்போது பெரும் அளவில் சேதாரம் கழிக்கப்படாமல் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் 4 அடையாளங்கள் இடப்பட்டு வந்தன. அதில் முதல் அடையாளம் இந்திய தரநிர்ணய அமைப்பு குறியீடு, 2-வது அடையாளம் தங்கத்தின் தூய்மையை குறிக்கும். 3-வது அடையாளம் ஹால்மார்க்கிங் மையத்தையும், 4-வது அடையாளம் தங்க நகையை விற்பனை செய்யும் கடையையும் குறிக்கும்.

தனித்த அடையாள எண்

இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதிய முறையில் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையில் 3 அடையாளங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் 2 அடையாளங்கள் ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தையும், நகையை தயாரித்த கடையையும் குறிக்கும். 3-வது அடையாளமானது 6 இலக்க தனித்த அடையாள எண் (எச்.யூ.ஐ.டி.) ஆகும்.

இந்த 6 இலக்க தனித்த அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள 'பிஸ் கேர்' (BIS CARE) செயலியில் சோதனை செய்து பார்க்கும்போது தங்க நகையின் மொத்த தகவலும் தெரிந்துவிடும்.

அதாவது நகைக் கடையின் பெயர், முகவரி, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகைக் கடையின் பதிவு எண், ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் அங்கீகார எண், எந்த தேதியில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டது, ஆபரணத்தின் பெயர் (மோதிரம், கம்மல், செயின்), முக்கியமாக நகையின் தூய்மை மற்றும் கேரட் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.

இதன் மூலம் பொதுமக்கள் இனி வாங்கப் போகும் நகையின் துய்மை, தரம் உள்ளிட்ட விவரங்களை நகையை வாங்கும் முன்பே 'பிஸ் கேர்' செயலி மூலம் தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிமுகமாகி இருக்கும் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) கூடிய ஹால் மார்க் முத்திரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நம்பிக்கை தருகிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.

வரவேற்கத்தக்கது

தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குனரும், மதுரை மாவட்ட வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்க தலைவருமான பா.ரமேஷ்:- தங்க நகைகளுக்கு 6 இலக்க ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. இதை கடந்த 2000-ம் ஆண்டு முதல் மத்திய அரசு கூறி வந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த முத்திரை பதித்த நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தர விட முடிவு செய்தது. அப்போது நகை வியாபாரிகள் கேட்டுக் கொண்டதால் 4 இலக்க ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய கடந்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டன.

இந்த கால கட்டத்தில் 4 இலக்க ஹால்மார்க் நகைகள் விற்பனை ஆகாமல் இருந்தாலும் கவலை இல்லை. அதை 6 இலக்க ஹால் மார்க் நகைகளாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஒரு நகைக்கு ரூ.45 வரை செலவாகும். மேலும் 6 இலக்க ஹால்மார்க் நகைகளின் தரம் குறித்த செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. அந்த செயலியில் தங்க நகையில் உள்ள 6 இலக்க ஹால்மார்க் எண்ணை உள்ளீடு செய்தால் நகை குறித்த விவரங்கள் தெரிய வரும். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது.

தரம் குறையாமல் வாங்க முடியும்

புதுக்கோட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை கஸ்தூரி:- எனக்கு விவரம் தெரிந்த போது தங்கத்தின் விலை கிராம் ரூ.400-க்கு இருந்தது. அப்போது நான் சிறுக, சிறுக தங்கத்தை வாங்கி சேமித்தேன். அப்போது தங்கத்தின் தரத்தை பார்த்து வாங்குவதில் 916 கே.டி.எம். என சொல்லப்படுவது உண்டு. பெரும்பாலும் இதனையே தான் பார்த்து வாங்கியது உண்டு. அதன்பின் நகைகள் வாங்கும் போது பல்வேறு விதமாக கூறுவது உண்டு. அதனை கேட்டு தெரிந்து கொள்வேன். தற்போது 6 இலக்க எண்களுடன் 'ஹால் மார்க்' கட்டாயம் என அறிவித்துள்ளனர். தங்கத்தை அதன் தரம் குறையாமல் வாங்க ஏதுவாக இருக்கும். இந்த முத்திரை உள்ளதா? என்று நகைகளை பார்த்து பொதுமக்கள் வாங்க முடியும்.

ஏமாற்ற முடியாது

அரிமளம் ஒன்றியம் முனசந்தை கிராமத்தை சேர்ந்த சரோஜா:- சிறுக சிறுக சேர்த்து நகை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகை கடைகளுக்கு செல்லும் பொழுது அங்கு பேரிடியாக விழுவது செய்கூலி, சேதாரம் தான். அதுமட்டுமின்றி பொதுமக்கள் ஒரு கடையில் வாங்கும் நகையை அதே கடையில் தான் திருப்பி விற்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் வேறொரு கடையில் நகை வாங்கினால் அதனுடைய தரம் குறைவாகத்தான் இருக்கும். என்னுடைய கடையில் வாங்கி இருந்தால் 916 விலைக்கு எடுத்துக் கொள்வேன் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நகை வாங்கிய தொகையில் சுமார் கால் பங்கு அளவிற்கு பணத்தை குறைத்து விடுகின்றனர். தற்போது மத்திய அரசு ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி எந்த கடையில் நகை வாங்கினாலும் அதை வேறு ஒரு கடையில் கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கிக் கொள்ள முடியும். அப்போது அந்த கடைக்காரர் இந்த நகை தரம் குறைந்தது என ஏமாற்ற முடியாது. ஏனெனில் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் தரச் சான்று வழங்கப்பட்டுள்ளதால் நகையின் தரம் குறைவு என பொய் சொல்ல முடியாது. மேலும் இனிவரும் காலங்களில் ஜி.எஸ்.டி. இல்லாமல் நகைகளை விற்பனை செய்ய இயலாது. மேலும் இவர் விவரம் இல்லாதவர் ஆதனால் நகையை ஏமாந்து வாங்கி வந்து விட்டார் என கூறவும் முடியாது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

புதுக்கோட்டையை சேர்ந்த சுபிக்ஷா:- ஹால்மார்க் தங்க நகைகள் இதற்கு முன்பு வாங்கியிருந்தாலும், இனி வாங்கும் போது 6 இலக்க எண் உள்ளதா? என்பதை கட்டாயம் பார்த்து வாங்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிறைய பணம் கொடுத்து வாங்குகிற நகைகள் போலியாக இல்லாமல் இருப்பதற்கு இது நல்ல திட்டம் தான். 6 இலக்க எண்ணை வைத்து அந்த நகையை நாம் பரிசோதனை செய்து கொள்ள முடியும். ஹால்மார்க் தர ஆய்வு மையத்திலும் நாம் நேரிடையாக சென்று இந்த நகையை பரிசோதனை செய்து கொள்ள முடியும். போலி மற்றும் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும். சட்டவிரோத விற்பனையும் குறையும். மேலும் சட்டவிரோதமாக தங்கத்தில் முதலீடு செய்வதிலும் குறைய வாய்ப்பு உள்ளது. நகைகள் வாங்கும் போது குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி கணக்கு பரிவர்த்தனை மூலம் நடைபெறும் போது விற்பனை மற்றும் வாங்கல் பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டப்படியான செயலுக்குள் வந்துவிடும். நகைகளும் மோசடியாக விற்கப்பட்டால் நகைக்கடையின் உரிமையாளருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை என்பது வரவேற்க கூடியது. தங்கத்தின் விலை தான் ஏற்றமாக உள்ளது. தினமும் விலை மாற்றம் இருப்பதை நிலையான விலைக்கு கொண்டு வர வேண்டும்.

தரத்தை தெரிந்து கொள்ளலாம்தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க, 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.

ஆரியூரை சேர்ந்த சக்திபிரியா:- ஒரு காலத்தில், நகைக்கடையினரின் மீது கொண்ட நம்பிக்கையில்தான் நகைகளை வாங்கி வந்தோம். அதன்பிறகு ஹால்மார்க் முத்திரை வந்தது ஓரளவு நகைகள் மீதான நம்பிக்கையை வழங்கியது. தற்போது அதன் பரிணாமமாக 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால்மார்க் முத்திரை வந்துள்ளது. இதன் மூலம் நகைகளை வாங்கும் முன்பே நகைகளின் தரம், அளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம். நகைக்கடைக்காரர்கள் தாங்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை எடுத்து கூறி தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story