மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு; மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
கோபால்பட்டி அருகே மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வான மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். அப்போது அப்பள்ளியை சேர்ந்த 16 பேர் முதலிடமும், 9 பேர் 2-ம் இடமும், 4 பேர் 3-ம் இடமும் பிடித்து வெற்றிபெற்றனர்.
இதன்மூலம் முதலிடம் பிடித்த 16 மாணவ-மாணவிகள் கன்னியாகுமரியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் விளையாட ஒரே பள்ளியில் இருந்து 16 பேர் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, கொசவபட்டி அந்தோணியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் ஜான்சன், தலைமை ஆசிரியர் செல்வநாயகம், உடற்கல்வி ஆசிரியர் தாமஸ் சேக்ஸ்ராஜ், டேக்வாண்டோ பயிற்சியாளர் ஜெயசீலன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளை பாராட்டினர்.