சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஜெய்பீம்' திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் நீதிபதி சந்துரு முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள 'சத்யதேவ் சட்ட அகாடமி'யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
'சத்யதேவ் சட்ட அகாடமி'யை தொடங்கி வைத்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #சத்யதேவ் சட்ட அகாடமி'யை-யைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!
எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!