நெல்லையில் காங்கிரசார் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்; முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அறிவிப்பு


நெல்லையில் காங்கிரசார் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்; முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அறிவிப்பு
x

ராகுல்காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லையில் காங்கிரசார் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி

ராகுல்காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லையில் காங்கிரசார் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து...

கடந்த 2014-ம் ஆண்டு உலக கோடீஸ்வரர் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த அதானி தற்போது 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் அவரை பழிவாங்குவதற்காக பதவியை பறிக்கும் வகையில் செயல்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பேசியதற்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் எந்த அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது?. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீடு செய்ய 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், மறுநாளே பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

15-ந்தேதி ரெயில் மறியல்

ராகுல்காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நெல்லை சந்திப்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20-ந்தேதி (வியாழக்கிழமை) மானூரில் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இதில் காங்கிரசார் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். ராகுல்காந்தி பதவி பறிப்பு நடவடிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

அம்பை சம்பவம்

அம்பை பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உதவி கலெக்டர் விசாரணை முடிந்துள்ளது. தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் நேர்மையான விசாரணை நடைபெறும். பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். அவர் இத்தகைய செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாநில வக்கீல் அணி இணை தலைவர் மகேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்ககுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story