திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேர் கைது


திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேர் கைது
x

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியலுக்கு முயற்சி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு மத்திய அரசை கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்றுகாலை காங்கிரசார் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்துக்கு தயாரானார்கள்.

மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஈஸ்வரன், மாநில செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

141 பேர் கைது

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திருப்பூர் டவுன்ஹால் அருகில் இருந்து ஊர்வலமாக கட்சிக்கொடிகளை ஏந்தியபடி ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். திருப்பூர் வடக்கு போலீசார் ரெயில் நிலைய நுழைவுவாசலில் இரும்பு தடுப்புகளை அமைத்து யாரும் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முடியாதபடி செய்தனர்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகள் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். 20 பெண்கள் உள்பட 141 பேர் கைது செய்யப்பட்டு பார்க் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

150 பேர் கைது

இதுபோல் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று மாலை திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார்.

ரெயில் நிலையம் முன் சென்று போராட்டம் செய்தனர். பின்னர் வடக்கு போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். இதில் 20 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story