ரெயில் மறியலுக்கு காங்கிரசார் முயற்சி


ரெயில் மறியலுக்கு காங்கிரசார் முயற்சி
x

விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியலுக்கு காங்கிரஸ் கட்சியினர் முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சாவூர்
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள்

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குணா பரமேஸ்வரி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராஜ், மாநில விவசாய பிரிவு நிர்வாகி ஜேம்ஸ், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், மகிளா காங்கிரஸ் நிர்வாகி கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு மத்தியஅரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ரெயில் மறிலுக்கு முயற்சி

பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் மூலம் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியினர் சென்றபோது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நிர்வாகி ஒருவர், மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆவேசத்துடன் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில் நிலைய நுழைவு பகுதியில் கயிறுகளை குறுக்கே பிடித்தபடி போலீசார் நின்று, காங்கிரஸ் கட்சியினர் உள்ளே செல்லாதபடி தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 65 பேரை போலீசார் கைது செய்து தஞ்சை வடக்குவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.Next Story