'ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்' ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
சென்னை,
அதானியின் பங்குச்சந்தை முறைகேடுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், பிரின்ஸ், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்டத் தலைவர்கள் முத்தழகன், திரவியம், சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜனநாயகத்தின் தொட்டில்
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
நமது நாட்டின் பொருளாதார கொள்கை என்பது நேருவால் கொண்டு வரப்பட்ட கலப்பு பொருளாதாரம் ஆகும். இது, தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் இயல்பாக வளர்ச்சி அடைந்தன அல்லது வீழ்ச்சி அடைந்தன. ஆனால், மோடியின் ஆட்சியில் தனி நபரான அதானி வளர்ச்சி அடைகிறார்; இந்தியா வீழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, அதானிக்கு மோடி அரசு உதவுகிறது என்று ராகுல்காந்தி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
பிரதமர் மோடி பேசும்போது, ''இந்தியாவை வளர்ச்சி பாதையில் நான் அழைத்துச் செல்கிறேன். ஆனால் காங்கிரஸ் எனக்கு கல்லறை கட்டுகிறது. நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ஒருவர் (ராகுல்காந்தி) கொச்சைப்படுத்துகிறார்'' என்கிறார். அவர் கூறுவது இரண்டும் தவறு.
மோடி தான் காங்கிரஸ் இல்லாத தேசம் அமைப்போம் என்றார். ஆனால், நேரு பல கட்சி ஆட்சி முறையை ஆதரித்தார். எனவே, ஜனநாயகத்தின் தொட்டில் காங்கிரஸ் கட்சி தான். பாரம்பரியம் மிக்க ஜனநாயகம் என்று மோடி கூறுகிறார். அந்த பாரம்பரியத்திற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான்.
ராகுல்காந்தியின் வெற்றி
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக மோடி கூறுகிறார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு எந்த துறையில் நாடு வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 9.6 சதவீதமாக இருந்தது. தற்போது, அது 2 சதவீதம் குறைந்திருக்கிறது. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா?
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல் விலை ரூ.70, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400 -க்கு விற்பனையானது. ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ.100-க்கு அதிகமாகவும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,200-க்கும் விற்பனையாகிறது. இத்தனைக்கும், அப்போது கச்சா எண்ணெய் விலை 108 டாலர், இப்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உள்ளது. இது தான் வளர்ச்சியா?
இவர்கள் (பா.ஜ.க.வினர்) ஒரு இனவெறியர்கள், மதவெறியர்கள் என்று இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலமாக சுட்டி காட்டியவர் ராகுல் காந்தி. முதல் முறையாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் நடைபயணத்தைக் கண்டு பா.ஜ.க. அச்சப்பட்டு உள்ளது. அது தான் ராகுல்காந்தியின் வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், இலக்கிய அணித் தலைவர் பி.எஸ்.புத்தன், கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் பா.சந்திரசேகர், தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வின்சென்ட் மற்றும் துறைமுகம் ரவிராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.