ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து, திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் ரெயில் மறியல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான வழக்கில், சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம், மறியல் என தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதும் ரெயில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்திலும் மறியல் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். இதற்காக நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் அருகில் மாநகராட்சி கிழக்கு மண்டலதலைவர் கார்த்திக் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, சிவாஜி, குப்புசாமி, முகமதுசித்திக் உள்ளிட்ட கட்சியினர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்தும், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதற்கிடையே ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ரெயில் மறியல் செய்ய முயன்றதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 45 பேரை கைது செய்தனர்.
கொடைரோடு, ஒட்டன்சத்திரம்
இதேபோல் கொடைரோடு ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல் கனிராஜா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
அப்போது ரயில் வரும் சத்தம் கேட்டு, ரெயில்வே நிலையத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் ஓடினர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே ரெயில் மறியலில் ஈடுபட முடியாததால், ரயில் நிலையத்தில் தரையில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அப்துல்கனிராஜா, நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோகுல்நாத், மாவட்ட மகளிர் அணி தலைவர் தனலட்சுமி ஆகியோர் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து சதீஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் சிவசக்திவேல் கவுண்டர் ஆகியோர் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.