காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானல், பழனியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிராஜூதீன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் சிறை தண்டனை தொடர்பான மேல்முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பழனியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், பஸ்நிலைய ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் முத்துவிஜயன் தலைமை தாங்கினார். இதில், மண்டல தலைவர் வீரமணி, நகர பொருளாளர் தமிழரசன் மற்றும் பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தொப்பம்பட்டியில் வட்டார தலைவர் சக்தி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சின்னத்துரை, பொருளாளர் பழனிசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பெரியநாயகி, வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் கார்த்திக் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.