கருப்பு பலூன்களை பறக்கவிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூர்களை பறக்கவிட்டு, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதையொட்டி காமராஜர் சிலை, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் துணை தலைவர்கள் அபிபுல்லா, பரமசிவம், பொதுச்செயலாளர்கள் அழகர்சாமி, நிக்கோலஸ், வேங்கைராஜா, ஜாகிர்உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அனைவரும் கையில் கருப்பு பலூன்களை பிடித்தபடி பிரதமரை திரும்பி போக சொல்லியும், கோ பேக் மோடி என்றும் கோஷமிட்டபடி வந்தனர். இதையடுத்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் பஸ் நிலையம் அருகே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த கருப்பு பலூன்களை போலீசார் பறித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கையில் வைத்திருந்த பலூன்களை பறக்கவிட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.