காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்


காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், விருத்தாசலத்தில் ரெயில் மறியல் செய்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சியினர் 299 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடையே வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

திரண்டனர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் கலையரசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ஒன்று திரண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் விஸ்வநாதன், மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் மற்றும் ஓ.பி.சி. பிரிவு ராம்ராஜ், மீனவர் பிரிவு கடல் கார்த்திகேயன், உமாபதி, வேலு, ராதாகிருஷ்ணன், ராமதுரைசாமி உள்ளிட்ட கட்சியினர் திரண்டனர்.

மறியல்

தொடர்ந்து அவர்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் விரைவு ரெயில் வருவதற்கு முன்பு தண்டவாளத்திற்குள் மாற்றுப்பாதை வழியாக திடீரென சென்று மறியலில் ஈடுபட்டனர்.இதை பார்த்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் போலீ சாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.அப்போது போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் வேலுச்சாமி, ரங்கமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரவிக்குமார், மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட துணை தலைவர் செல்வக்குமார், கிஷோர்குமார், காமராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ரெயில் நிலையத்திற்குள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சுற்றி வளைத்து, ரெயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.

அப்போது சோழன் விரைவு ரெயில் வந்தது. இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் சிலர் தண்டவாளத்தை நோக்கி ஓடி மறியல் செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் சோழன் விரைவு ரெயில் சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றது. இதனால் ஆவேசமடைந்த கட்சி நிர்வாகிகள், ஒரு தரப்பினரை மட்டும் எப்படி தண்டவாளத்தில் அனுமதித்தீர்கள். நாங்களும் ரெயில் நிலையத்திற்குள் சென்று மறியல் செய்வோம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

106 பேர் கைது

பின்னர் வேறு வழியின்றி அதற்கு போலீசார் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 2 தரப்பை சேர்ந்த 106 பேரை போலீசார் கைது செய்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலத்தில்

காங்கிரஸ் கட்சி சார்பில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, பொருளாளர் ராஜன், மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜீவ் காந்தி, நகர தலைவர்கள் விருத்தாசலம் ரஞ்சித் குமார், மங்கலம்பேட்டை வேல்முருகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஹேமலதா, வட்டார தலைவர்கள் ராமச்சந்திரன், கலியபெருமாள், ராவணன், பீட்டர் சாமி கண்ணு, கலியபெருமாள், ராமராஜன் உள்பட 193 பேரை கைது செய்து அங்குள்ள ரெயில்வே திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்பு மாலையில் அனைவரையும் விடுவித்தனர். முன்னதாக பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story