காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
விழுப்புரம், திண்டிவனம், சின்னசேலத்தில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 241 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
120 பேர் கைது
அதன்படி மத்திய மாவட்ட தவைர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக் அலி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், நகர மன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் இம்ரான், கோட்டக்குப்பம் சாதிக்பாஷா, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சுரேஷ் ராம், வட்டார தலைவர்கள் ராதா, காமராஜ், பொம்பூர் ஏழுமலை, ரவி ரெட்டியார், துணை தலைவர் பழனி, பேரூராட்சி தலைவர்கள் கதிர்வேல், தஸ்தகீர் மற்றும் விட்டோ பாய், வசந்தா காசிநாதன், மகேஸ்வரி உள்பட 120 பேரை போலீசார் கைது செய்து மகாராஜபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திண்டிவனம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து திண்டிவனம் நகர கமிட்டி தலைவர் விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன், நகர தலைவர்கள் சூரியமூர்த்தி, கந்தசாமி, வட்டார தலைவர்கள் செல்வம், காத்தவராயன், சக்திவேல், புவனேஸ்வரன் முருகையன், எஸ்.சி.துரை, உதயானந்தன், ராமமூர்த்தி, வக்கீல் அஜிஸ், மெடிக்கல் வெங்கட், பொன்ராஜா, வரதராஜ், ஜெய் கணேஷ், தகவல் தொழில்நுட்பம் கோபாலகிருஷ்ணன், சேவா தளம் மாவட்ட தலைவர் சசிகுமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் அக்கட்சியினர் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உள்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.