தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாக, மத்திய அமலாக்கத்துறையை கண்டித்து தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் பெருமாள் சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி அங்கு இருந்த மகாத்மா காந்தி, காமராஜர், வ.உ.சி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், காங்கிரஸ் கட்சியின் வக்கீல் மகேந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, எஸ். பி.ராஜன், மாநகர் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கோவில்பட்டி காந்தி சிலை முன்பு நேற்று காங்கிரசார் சத்யாகிரக போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் திருப்பதி ராஜா, வீரபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.