தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம்
இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு பரிவட்டம் கட்டி ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
ராமேசுவரம்,
இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு பரிவட்டம் கட்டி ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
பிரதிஷ்டை விழா
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவானது நேற்று முன்தினம் ராவண சம்காரத்துடன் தொடங்கியது.
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் 2-வது நாளான நேற்று விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து ராமபிரான், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்திலும் மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணனின் தம்பி விபீஷ்ணருக்கு, ராமபிரான் தலையில் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
பட்டாபிஷேகம்
இதைதொடர்ந்து ராமர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு மாலை 5 மணி வரையிலும் பக்தர்கள் தீர்த்தம் நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
ராமர் மற்றும் விபீஷ்ணர் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் கோவில் நடையானது மாலை 5 மணிக்கு மேல் திறக்கப்பட்டு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழாவின் கடைசி நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம் 12:30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.