500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படும். ராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக ராமநாதபுரம் தாயுமானவ சாமி கோவில் வளாகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. தற்போது தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் வாகனம் மூலம் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
500 இடங்களில்
இது பற்றி இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறும் போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் 25 இடத்திலும், ராமநாதபுரத்தில் 50 இடத்திலும், பரமக்குடியில் 60 இடத்திலும், சாயல்குடியில் 15, மண்டபம் 18, பாம்பன் 10, ஆர்.எஸ்.மங்கலத்தில் 15, தங்கச்சிமடம் 5, தொண்டி 15 என மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளன.
மேலும், வருகிற 1-ந் தேதி ராமேசுவரம், மண்டபம், பரமக்குடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும், 2-ம் தேதி ராமநாதபுரம், ஏர்வாடி, தேவிபட்டினம் உள்ளிட்ட ஊர்களிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு சிலைகள்
இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்காக இந்து முன்னணி சார்பில் பேப்பர் கூலால் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை உயரத்திலான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் மூஷிக வாகனம், ரிஷப வாகனம், சிம்மம், மான் உள்ளிட்ட பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற பல்வேறு சிலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.