5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
ஆலங்குளத்தில் 5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் 5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.
முன்னாள் துணை தலைவர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வீரபுத்திரன். இவர் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் ஆவார். இவரது சொந்த ஊர் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் ஆகும். இதனால் குடும்பத்தினர் ஆலங்குளம், வீராணத்தில் மாறி, மாறி வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வீரபுத்திரன் வீராணத்தில் இருந்து ஆலங்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று காலையில் வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கபோர்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த வைர மோதிரம், தங்க நகைகள் என சுமார் ரூ.4¼ லட்சம் மதிப்பில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆசிரியர்கள்
அப்போது, அதே பகுதியில் அடுத்தடுத்து மேலும் 4 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகையா (49). அரசு பள்ளி ஆசிரியரான இவர் திருவாரூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து ரூ.8 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
தொடர்ந்து லாசர் (39) என்பவர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை கொள்யைடித்து சென்றனர்.
வலைவீச்சு
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி (57). இவர் தற்போது ஆலங்குளம் காந்தி நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டு கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் ரூ.20 ஆயிரம், 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அதே பகுதியில் வசிப்பவர் பொன்சிவ ராமச்சந்திரன் (40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டுக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.