சீமான் பிரசாரம் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலனைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


சீமான் பிரசாரம் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலனைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

ஈரோடு

சீமான் பிரசாரம் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.

பரிசீலனை

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மாலை தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இருதரப்பினர் இடையே நடந்த மோதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலையொட்டி போதுமான அளவு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இனிமேல் சீமான் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும்.

கூடுதல் பறக்கும் படைகள்

ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுவதற்காக ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பதற்றமான இடங்களில் துணை ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் புகார்கள் குறித்து எழுத்து பூர்வமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கொடுத்தால் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலையொட்டி 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. புகார் வந்தால் உடனடியாக சென்று விசாரணை நடத்தும் வகையில் கூடுதலாக 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 7 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தொகுதிக்கு உள்ளே வரும் வாகனங்கள், வெளியே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. 15 இருசக்கர வாகனங்களிலும், 7 நான்கு சக்கர வாகனங்களிலும் போலீசார் தொகுதிக்குள் ரோந்து சுற்றி வருகின்றனர். இதுவரை தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிரசாரம், பொதுக்கூட்டத்துக்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை பொறுத்து அனுமதி வழங்க நிபந்தனை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story