நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதியா?


நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதியா?
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் கிடந்த கம்பி மீது நிஜாமுதின் ரெயில் என்ஜின் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் கிடந்த கம்பி மீது நிஜாமுதின் ரெயில் என்ஜின் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இரும்பு கம்பி

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ்கள் மூலம் வந்து செல்கிறார்கள். வெளிமாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் மூலமாகவே கன்னியாகுமரி வருவது வழக்கம். இதனால் கன்னியாகுமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பல ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள வடுகன்பற்று பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 அடி நீளமுள்ள இரும்பு கம்பி கிடந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதின் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் யார்டில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தது. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. எதிர்பாராத விதமாக ரெயில் என்ஜின் அந்த இரும்பு கம்பி மீது பயங்கர சத்தத்துடன் மோதிவிட்டு சென்றது.

போலீஸ் விசாரணை

சத்தம் கேட்டு அங்கு இரட்டை ரெயில் பாதை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் இரும்பு கம்பி கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பியானது இரட்டை ரெயில் பாதை பணிக்காக தண்டவாளம் அருகே வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அங்குள்ள மற்ற கம்பிகளை எடுக்கும் போது அந்த கம்பி தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்ததா? அல்லது கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழையால் கம்பி சறுக்கி தண்டவாளத்தில் விழுந்ததா? என்று தெரியவில்லை.

ரெயிலை கவிழ்க்க சதி?

இதற்கிடையே தண்டவாளத்தில் இரும்பு கம்பி கிடந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக ரெயில்வே அதிகாரி முனுசாமி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மர்ம நபர்கள் யாராவது ரெயிலை கவிழ்க்க சதிசெய்து தண்டவாளத்தில் அந்த இரும்பு கம்பியை வைத்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்டவாளத்தில் பாறாங்கல்

இந்த சம்பவத்திற்கு முன்னதாக நேற்று முன்தினம் மதியம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் ஒரு பாறாங்கல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ரெயில்வே போலீசார் அங்கு சென்று பாறாங்கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்புறப்படுத்தப்பட்ட பாறாங்கல்லின் அருகே மதுபாட்டில்களும் கிடந்தன. எனவே மதுகுடிக்க வந்தவர்கள் யாரோ பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்து அதில் அமா்ந்து மதுக்குடித்து விட்டு பாறாங்கல்லை அங்கே வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story