ரூ.43 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி


ரூ.43 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி
x

வேலூர் பாலாற்றின் குறுக்கே 2 இடங்களில் ரூ.43 கோடியில் தடுப்பணைகள் கட்டும்பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

வேலூர்

தடுப்பணைகள்

வேலூர் பாலாற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி நீர்வளத் துறையின் சார்பில் வேலூர், காட்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

சேண்பாக்கம் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ.18 கோடியே 31 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அரசால் வழக்கப்பட்டது. 675 மீட்டர் நீளம், பாலாற்றின் தரைமட்டத்திலிருந்து 7 மீட்டர் ஆழத்திற்கு தரைக்கீழ் தடுப்பணையாக அமைக்கப்பட உள்ளது. இத்தரைக்கீழ் தடுப்பணை அமைப்பதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு பாலாற்றின் இரு புறங்களிலும் உள்ள 8 கிராமங்கள், 156 கிணறுகள் பயனடைந்து, அதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையில் இருந்து அதிகப்படியாக வினாடிக்கு 96,398 கன அடிநீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணியானது தற்பொழுது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது.

விவசாய நிலங்கள்

இதேபோல காட்பாடி தாலுகா அரும்பருத்தி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தரைகீழ்தடுப்பணை அமைக்க நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ.24 கோடியே 82 லட்சத்தில் நிர்வாக ஒப்புதல் அரசால் வழங்கப்பட்டது. 720 மீட்டர் நீளம் கொண்டதாகும். தடுப்பணை அமைக்கப்படுவதால் பாலாற்றின் இருபுறங்களிலும் உள்ள 8 கிராமங்கள், 251 கிணறுகள் மற்றும் 5 உறைகிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து அதன் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதன் மூலம் சுமார் 2,500 விவசாயிகள் நேரடியாகவும், 7,850 பொதுமக்கள் மறைமுகமாகவும் பயனடைவார்கள். இப்பணி 35 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. இருதடுப்பணைகளும் ரூ.43 கோடியே 13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் இரு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணைகளின் பணிகளின் முன்னேற்றம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story