ரூ.12 கோடியில் 2 பாலங்கள் கட்டும் பணி
மேல்மலையனூர் ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் 2 பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
மேல்மலையனூர்:
மேல்மலையனூரில் இருந்து அவலூர்பேட்டை செல்லும் பிரதான சாலையில் தாயனூர், கோவில் புறையூர் தோப்பு ஆகிய இடங்களில் உள்ள தரைப்பாலத்தையும், தொரப்பாடி- கீழ் புதுப்பட்டு சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் உயர்மட்ட பாலமாக கட்ட தமிழக அரசு ரூ.11 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணியை தொடங்குவதற்காக பூமி பூஜை நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் லாவண்யா ராஜேஷ், ரமேஷ், அன்னபூரணி மணி ஆகியோர் வரவேற்றனர். நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து 2 பாலங்கள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோதுங்கன், சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகுமார், தக்ஷிணாமூர்த்தி, காசியம்மாள் கோதண்டம், ராஜா, கலா நாராயணமூர்த்தி, யசோதரை சந்திரகுப்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.