திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி: புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி விரைந்து முடிக்க கோரிக்கை
திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் சாலையில் புழுதி பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லக்கூடிய இருவழிச்சாலையானது திண்டிவனம் நகரத்தையும், மரக்காணம் வட்டத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலை 32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன.
இந்த கல்குவாரிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வதால் இந்த பிரதான சாலையில் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து காணப்பட்டது.
4 வழிச்சாலையாக மாற்றும் பணி
எனவே தற்போது உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முதல்-அமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.276 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 3.8.2022 அன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 4 வழிச்சாலையாக அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து முதற்கட்டமாக சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. பின்னர் சாலையின் இருபுறமும் வடிநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே சிறிய பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் இருபுறமும் இருக்கும் மண் முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு அதில் சிமெண்டு கலவை கலந்த ஜல்லி போடப்பட்டு அது முழுவதும் இறுக்கமான பிறகு அதன் மீது தார் சாலை போடப்படுகிறது. இவ்வாறு போடப்படும் சிமெண்டு கலந்த ஜல்லி கலவை இறுக்கமாவதற்கு சில மாத காலம் எடுப்பதால் அதை அப்படியே பணியாளர்கள் விட்டு விடுகின்றனர். ஜல்லி கலவை காய்ந்த பிறகு அதில் உள்ள சிமெண்டு துகள்கள் மற்றும் சாலைகளின் இருபுறமும் குவிக்கப்பட்டுள்ள மண்மேடுகளில் இருந்து வரும் புழுதிகள் காற்றில் பறக்கின்றன.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி விழுவதால் தடுமாறி அவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மேலும் தங்களது பயணத்தை முடித்து விட்டு கண்ணாடியில் பார்க்கும்போது அவர்கள் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அவர்கள் மீது தூசு படிந்துள்ளது. புழுதி பறக்கும் காற்றை சுவாசிப்பதால் பலருக்கு சுவாசக்கோளாறு பிரச்சினைகளும், உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைகின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிமெண்டு கலவைகள் மீது தினமும் தண்ணீரை ஊற்றி உலர்த்த வேண்டும் எனவும் சாலை விரிவாக்க பணியை விரைவாக மேற்கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கனரக வாகன ஓட்டிகள் வாகனத்தை அதிவேகமாக இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.