திருச்செந்தூர் அருகே ஏழைகளுக்கு ரூ.51 கோடியில் 512 வீடுகள் கட்டும் பணி
திருச்செந்தூர் அருகே ஏழைகளுக்கு ரூ.51 கோடியில் 512 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஏழைகளுக்கு ரூ.51 கோடி மதிப்பில் 512 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர்கள் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
512 வீடுகள்
பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தலை அருகில் ரூ.51 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மொத்தம் 512 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
3 மாதங்களில்...
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அன்பரசன் கூறுகையில்,
ஆலந்தலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் தற்போதைய பணி நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். வீடுகள் கட்டப்பட்டு வரும் பகுதியில் மழைநீர் தேங்குவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வருகின்ற காலங்களில் கடும்மழை பெய்தாலும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வராமல் இருக்க வாரியத்தின் சார்பில் விரைவில் சரி செய்து கொடுக்கப்படும்.
இதுவரை கட்டிடப் பணிகள் 75சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இன்னும் 3 மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்படும். பின்னர் இந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகளின் பங்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கட்ட வேண்டும். அதை பெற்று கொண்டு வீட்டிற்கான ஆவணங்கள் வழங்கப்படும், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், தூத்துக்குடி இளநிலை பொறியாளர் மணிகண்டன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் சாமி தரிசனம்
பின்னர் அமைச்சர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.